கேள்வி/பதில்_

கேள்விகள்

தமிழ்க் கற்கைகளுக்கு ஓர் இருக்கை ஏன் அவசியம்?

2000 வருடங்களுக்கும் மேற்பட்ட இலக்கியமுடைய தமிழ் மொழி, உலகில் மிக நீண்டகாலம் வாழும் செம்மொழிகளுள் ஒன்றாகும். ஏனைய செம்மொழிகள் கிரேக்கம், வடமொழி, இலத்தீன், ஹீப்ரூ, பாரசீகம், சீனமொழி என்பனவாகும். தமிழ் உலகின் பலநாடுகளில் வாழும் 80 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களால் பேசப்படுவது. தமது பாரம்பரியம், வரலாறு என்பன குறித்து ஆர்வம் கொண்டவர்களும், தமது பிள்ளைகள் தமிழ் மொழியிற் தேர்ச்சி பெறல் வேண்டும் என்பதில் உறுதி பூண்டவர்களுமான 300,000 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட தமிழர்களுக்குக் கனடா வாழ்வகமாக விளங்குகின்றது. உணவகங்கள், வணிக நிறுவனங்கள், கலை, சமூக சேவைகள், பொதுசன ஊடகங்கள் என உயிரோட்டமான சமூகத்தைக் கொண்ட ரொறன்ரோ தமிழ்க் குடிவரவாளருக்கு ஒரு பிரதான மையமாகும். ‘ரைம்ஸ்’ உயர்கல்வி உலகப் பல்கலைக்கழகத் தரவரிசைப் பிரகாரம், அதியுயர் தரம்கொண்ட கனேடியப் பல்கலைக்கழகமான ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் தமிழ்க் கற்கைகளுக்கான இருக்கையை நிறுவத் தமிழ்ச்சமூகத்திற்குக் கிடைத்துள்ள வாய்ப்பானது, பெரும் வரலாற்று முக்கியத்துவம் உடையது. ஏனெனில் இது பல்கலைக்கழகம் தமிழ்க்கற்கைகளில் புலமையை விருத்தி செய்யவும், மேம்படுத்தவும், உலகின் மிகச் சிறந்த புலமையாளர்களிலிருந்து தெரிந்தெடுத்த ஒருவரைப் பேராசிரியராக நிரந்தர நியமனம் செய்யவும் வழி வகுக்கின்றது. இந்த முயற்சி புதிய ஆய்வுமுறைகளில் பயிற்சி பெற்ற, புதுத்தலைமுறையைச் சேர்ந்த தமிழ்க் கற்கைகள் சார் புலமையாளர்களை உருவாக்க உதவும்.. அத்துடன், கடந்த காலத்தில் பல்கலைக்கழகத்தில் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை விருத்தி செய்வதன் மூலம் தமிழ்க் கற்கைகளுக்கான உலகளாவிய தளமாக ரொறன்ரோவை நிலைப்படுத்தும். தமிழ்மொழியின் தொடர்ச்சியான பயன்பாடு, வளர்ச்சி, தமிழ்மொழிக்கான உலகளாவிய அங்கீகாரம் என்பவற்றுக்கான வாய்ப்புகளைச் செம்மைப்படுத்தும்.

அறக்கொடை இருக்கை என்றால் என்ன?

நன்கொடையாளர்களின் நிதியாதரவுடன் நிறுவப்படும் அறக்கொடை இருக்கையானது உயர்கல்வி நிறுவனமொன்றில் குறிப்பிட்ட துறையின் கீழ் கற்பித்தலுக்கும், ஆய்வுக்குமான கல்வி அலகு ஆகும். இதற்குக் கால வரையறை கிடையாது. அறக்கொடையானது ஆசிரியர் சம்பளம், ஆய்வு, மற்றும் பிரயாண உதவித்தொகை அல்லது அவற்றுடன் தொடர்புடைய செலவுகளை ஈடு செய்யும். மேலும், இவ் அறக்கொடை காலவரையறையின்றித் தொடரும்.

ஏன் ரொறன்ரோ பல்கலைக்கழகம்?

ஒன்ராரியோ மாகாணத்திலுள்ள ரொறன்ரோவில், குவீன்ஸ் பூங்காவைச் சுற்றியுள்ள பகுதியில் அமைந்திருக்கும் ரொறன்ரோ பல்கலைக்கழகம் பொது ஆராய்ச்சிப் பல்கலைக்கழகமாகும். இது 1827 இல் ‘ரோயல் சாட்டர்’ மூலம் கனடாவின் முதல் உயர்கல்வி நிறுவனமான ‘கிங்க்ஸ்’ கல்லூரியாகத் தோற்றுவிக்கப்பட்டது. கனடாவின் மூன்று மகாதேசாதிபதிகளும், நான்கு பிரதம மந்திரிகளும், நான்கு அந்நிய நாட்டுத் தலைவர்களும், பதினான்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் இப்பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றவராவர். 2019 ஆம் ஆண்டளவில் 10 ‘நோபெல்’ பரிசு பெற்றவர்களும், 03 ‘ரியூறிங்’ விருது பெற்றவர்களும், 94 ‘றோட்ஸ்’ புலமையாளர்களும், ஒரு ‘ஃபீல்ட்ஸ்’ பதக்கம் வென்றவரும் இப்பல்கலைக்கழகத்துடன் இணைந்திருந்தனர்.

கற்பித்தலுக்கும், ஆராய்ச்சிக்குமுரிய பல்கலைக்கழகமாக இது விளங்குவதால், தமிழ்க்கற்கைகளில் ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கும், புலமையாளருக்கும், ஆய்வாளருக்கும் அதிக வாய்ப்புகளை நல்குகிறது. இப் பல்கலைக்கழகம் தமிழ்க்கற்கைகள் தொடர்பில் உறுதியான அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வந்துள்ளது. 2006-2014 ஆண்டுகளுக்கிடைப்பட்ட காலத்தில் தமிழ்க் கற்கைகள் மகாநாடுகளை நடாத்தியதுடன், 2014 தொடக்கம் ” Tamil Worlds Initiative’ எனும் கருத்தரங்கினை நடாத்தி வருகின்றது. ”The Making of Tamils Worlds” எனும் பாடநெறியையும், ஆரம்ப, இடைநிலைத் தமிழ்மொழிப் பாடநெறிகளையும் வழங்கி வருகிறது. தமிழ்க்கற்கைகளுக்கென குறிப்பிடத்தக்க அளவு நன்கொடைகளை ஏற்கனவே ஈர்த்துள்ளது. ரொறன்ரோ பல்கலைக்கழக ஸ்காபரோ வளாகமானது ஆராய்ச்சி, கற்பித்தற் செயற்பாடுகளிலும், ரொறன்ரோ தமிழ்ச் சமூகத்துடன் இணைந்து இயங்குவதிலும் உறுதி பூண்டுள்ளது.

ரொறன்ரோ பல்கலைக்கழக ஸ்காபரோ வளாகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு ஏன் 3 மில்லியன் கனேடியன் டொலர்கள் தேவை?

இந்த அறக்கொடை இருக்கையை நிறுவுதல் மூலம் பல்கலைக்கழகம் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய கற்கை நெறியில் புலமையை விருத்தி செய்யக் கூடியதாகவும், உலகின் தலைசிறந்த புலமையாளர்களிலிருந்து ஒரு பேராசிரியரைத் தெரிந்தெடுத்து, பணியில் அமர்த்தக் கூடியதாகவும் இருக்கும். அறக்கொடையானது ரொறன்ரோ பல்கலைக்கழகத்தின் சொத்து முகாமைத்துவ நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும். அறக்கொடை நிதியிலிருந்து பெறப்படும் வருடாந்த வருமானத்தின் ஒரு பகுதி, பணவீக்கத்திற்கு எதிரான பாதுகாப்புக் கருதி, முதலுடன் சேர்க்கப்படும். எஞ்சிய வருட வருமானத்தைப் பல்கலைக்கழகம் பேராசிரியரின் ஊதியம், உழைப்புக்கான பிற நலக் கொடுப்பனவுகள், ஆராய்ச்சி என்பனவற்றுக்குச் செலவிடும். இந்த இருக்கை தாபிக்கப்பட்ட பின்னர் மேலதிகச் செலவுகள் ஏற்படும் பட்சத்தில், அவற்றைச் சமாளிக்கக் கூடுதலான நிதி தேவைப்படலாம். கொடையாளர்கள் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய குறிப்பிட்ட கற்கை நெறிகளுக்கோ அல்லது பல்கலைக்கழகத்திற்கெனப் பொதுவாகவோ மேலதிக நிதியை வழங்கலாம்.

தமிழ் இருக்கையின் பொறுப்புகள் யாவை?

கனடாவிலே முதன்முதலாக நிறுவப்படவிருக்கும் தமிழ் இருக்கையானது பின்வரும் செயற்பாடுகளை ஊக்குவிக்கும்.

தமிழ் தொடர்பான பின்னணியில் ஆய்வையும், புதிய கருத்துருவாக்கத்தையும் வழி நடத்துதல்; மாணவர்களை நவீன கற்கை நெறியில் பயிற்றுவிப்பதுடன் இடைநிலை அணுகுமுறைகளையும் (inter--disciplinary approaches) புகுத்துதல்.

விரிவுரையாற்றுதல், ரொறன்ரோ பல்கலைக்கழகத்தைச் சர்வதேச புலமைத்துவ வலையமைப்புகளுடனும், துறைவல்லுனர்களுடனும் இணைக்கும் அறிவுப் பரிமாற்றத்திற்கான தூதுவராக விளங்குதல்.

தமிழ்ப் பாரம்பரியத்தை நினைவு கூரல், பாதுகாத்தல் எனும் செயற்பாடுகளை ஆதரித்தல்; இதன் பொருட்டு வெவ்வேறு வழிகளில் தொழில்நுட்பப் பயன்பாட்டினை நுண்ணாய்வுக்கு உட்படுத்தி ஊக்குவித்தல்.

ஆய்வு, கற்பித்தல் என்பனவற்றின் குவிமையமும், தமிழ் இருக்கையின் ஏனைய பொறுப்புகளும் இந்தப் பதவியில் அமர்த்தப்படும் தனிப்பட்ட புலமையாளரில் பெரிதும் தங்கியுள்ளது.

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முயற்சிக்கு நான் எவ்வாறு ஆதரவு தெரிவிக்கலாம்?

பல்கலைக்கழகத்திற்கு நேரடியாக நீங்கள் வழங்கும் நன்கொடை கனடாவிலும், ஐக்கிய அமெரிக்காவிலும் வரி விலக்குப் பெறுதற்குத் தகுதியானது. இந்த இருக்கையை அமைக்கும் முயற்சியில் எங்களுடன் இணைந்து கொள்ளுமாறு உங்கள் நண்பர்களையும், குடும்பத்தினரையும் ஊக்கப்படுத்துங்கள். சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் பங்களிப்புக்கு இணையான நிதிப்பங்களிப்பைச் செய்யும். ஆதலால், நன்கொடை அளிப்பதற்கு முன்னர், தயவு செய்து நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்திடம் இது தொடர்பாக விசாரியுங்கள். கனேடியத் தமிழ்ச் சமூகத்திற்கும் ரொறன்ரோ பல்கலைக்கழகத்திற்குமான வரலாற்று மைல்கல்லொன்றை உருவாக்கும் பெரும் பணியில் எம்முடன் இணைந்து கொள்ளுமாறு உங்களை அழைக்கின்றோம்.

எனது நன்கொடையின் நூறுவீதமும் ரொறன்ரோ பல்கலைக்கழகத்திற்குப் போய்ச்சேருமா?

ஆம். உங்கள் நன்கொடையின் நூறு வீதமும் ரொறன்ரோ பல்கலைக்கழகத்திற்கே செல்லும்.  

நான் எவ்வாறு நன்கொடை அளிப்பது?

நீங்கள் இணையவழியாக இங்கே நன்கொடை வழங்கலாம்.

உங்கள் ஆதரவுடன் வரலாறு படைக்க முடியும். தமிழின் எதிர்காலத்தைக் கட்டமைத்திட இன்றே உதவிக்கரம் நீட்டுவோம்.

d

லோம ஐப்சம் டாலோர் அமீட், புனிதக் கருவி ஏெனன் காமோதோ லிகுல ஈவா டாலோர். ஏெனலிய மசஅ. மற்றும் சமூகவியல்